#Paralympics2024 | குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி!
பாராலிம்பிக்ஸ் தொடரில் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46) பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட் 16.38 மீட்டர் தூரம் வீசி தங்கமும், குரோசிய வீரர் 16.27 மீட்டர் தூரம் வீசி வெண்கலமும் வென்றனர். குண்டு எறிதலில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் வெல்வது 30 ஆண்டுகால பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்தியா மொத்தம் 21 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இதுவரை வென்றுள்ளது. 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன.