#Paralympics தொடரில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம்! குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார் ஹோகடோ செமா!
பாராலிம்பிக் தொடரில் குண்டு எறிதல் போட்டியில் ஹோகடோ செமா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் வாயிலாக இந்தியா இதுவரை 27 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 17-வது இடத்தை பிடித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் நாளை (08.09.2024)வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் F.57 போட்டியில் இந்திய வீரர் ஹோகடோ செமா 14.65 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் ஈரான் வீரர் யாசின் கோஸ்ரவி (15.96 மீ) தங்கப் பதக்கமும், பிரேசில் வீரர் தியாகோ பாலினோ டோஸ் சாண்டோஸ் (15.06 மீ) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 17-வது இடத்தில் உள்ளது.