பராகிளைடிங் விபத்தில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் உடல் மீட்பு!
பராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.
இமாச்சல பிரதேசம் லாஹௌல் - ஸ்பீதி பகுதியில் உள்ள மலைச்சிகரத்தில் கடந்த 13ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ட்ரெவர் போக்ஸ்தாஹ்லர் (31) என்ற இளைஞர் பாரசூட் உதவியுடன் பறந்து, பராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஆனால் விபத்து நடந்த பகுதி மோசமான வானிலை நிலவும் கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் உயிரிழந்தவரின் உடலை தேடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரின் உடலை தேட இந்திய - திபெத் எல்லை காவல்துறை வீரர்களின் உதவி கோரப்பட்டது.
தொடர்ந்து, இந்திய-திபெத் எல்லை காவல்துறையை சேர்ந்த வீரர்கள் தீவிரமாக தேடுதல் பணியின் ஈடுபட்டத்தில், சுமார் 14,800 அடி உயரத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்கப்பட்ட அவரின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி உயிரிழந்தவரின் உடலை தேடிக் கண்டுபிடித்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.