மகாராஷ்டிரா | பள்ளி, விடுதிகளில் #panicbutton -களை நிறுவ மாநில அரசு பரிசீலனை! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பேனிக் பட்டன்களை நிறுவ மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 16ம் தேதி 4 வயது சிறுமிகள் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக அக்ஷய் ஷிண்டே என்னும் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு மகாராஷ்டிராவில் பெரும் பேசுபொருள் மாறியதால், கொதித்தெழுந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டும், ரயில் பாதைகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, மகாராஷ்டிர அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு மாதத்திற்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், "மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் துறையின் புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும், பள்ளி வளாகத்திற்குள் பொருத்தமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். இணங்கத் தவறினால் நிதி மானியங்களை நிறுத்துதல் அல்லது பள்ளியின் செயல்பாட்டு அனுமதியை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் ஏற்படலாம்" தெரிவிக்கப்பட்டது.