ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா - பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழமை வாய்ந்த உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 85 வது பங்குனி உத்திர பெருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த நிலையில் இன்று சிறப்பாக பங்குனி உத்திரம் நடைபெற்றது.
ராமநாதபுரம் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக பால்குடம் பால் காவடி, வேல் காவடி, பறவை காவடி, சப்பர காவடி எடுத்து வந்து ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வழி விடு முருகன்
ஆலயத்தில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்காக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே 30 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று மாலை ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தின் முன்பாக பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.