"பம்பரம் சின்னம் விவகாரம் : வைகோ தாக்கல் செய்த அவசர முறையீடு மனு நாளை விசாரணை" - சென்னை உயர்நீதிமன்றம்!
”பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த அவசர முறையீடு மனு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாகக் கூறி, மதிமுக கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக மனு அனுப்பியது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 1ம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மதிமுக அளித்த மனுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த அவசர முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.