Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பிரதமர் மோடியால் பாம்பன் புதிய ரயில் பாலம் பிப்ரவரியில் தொடங்கப்படும்!”- ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தகவல்!

08:36 PM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிந்து, பிப்ரவரி மாதம் அவ்வழியாக பிரதமர் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் என  இந்திய ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்துள்ளார். 

Advertisement

ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதற்கு பாம்பன் ரயில் பாலம் முக்கிய
பங்காற்றி வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பழைய
பாலத்திற்கு அருகே ரூ.535 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கு
பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து 11.08.2019 அன்று பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கியது.

பாம்பன் புதிய ரயில் பால பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்
அப்பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர்  இன்று காலை மண்டபம் ரயில் நிலையம் வந்திறங்கினார். பின்னர் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே புதிதாக அமைய உள்ள ரயில் பாதையை ஆய்வு செய்து ரயில்வே அதிகாரிகளிடம் பணிகள் தொடங்குவது குறித்து ஆலோசித்தார்.

அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, ரயில் நிலையத்தில் புதிதாக அமைய உள்ள விநாயகர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பாம்பன் கடலில் அமைந்து வரும் புதிய ரயில் பால பணிகளை ஆய்வு செய்து தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் அதற்கான மாதிரி புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

பாம்பன் புதிய ரயில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் ரூப் நாராயண் சுங்கர் செய்தியாளரிடம் கூறியதாவது;

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் பால பணிகள் மிக துரிதமாக, நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 90 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்து வலுவான புதிய ரயில் தூக்கு பாலம் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடித்து பிரதமர் புதிய ரயில் பாலத்தில் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் என திட்டமிடப்பட்டுள்ளது என்றார் .

தொடர்ந்து பேசிய அவர், ராமேஸ்வரத்தின் துணை ரயில் நிலையமாக செயல்பட்டு வரும் மண்டபம் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என இன்று காலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில், ரயில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், விரைவில் மண்டபம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் சேவைக்கு தேவையான நில கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய ரயில்வே துறையுடன் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளித்து ரயில்வே துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. ஆதலால், விரைவில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தென்னக ரயில்வேயின் முதன்மை பொறியாளர்கள், மதுரை கோட்ட பொறியாளர்கள் மற்றும் பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான நிறுவனமான ஆர்விஎன் எல் நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Tags :
News7Tamilnews7TamilUpdatesPampan New Rail BridgepmoRameswaramRoop Narayan Sunkar
Advertisement
Next Article