பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மண்டபம் - ராமேசுவரம் இடையே உள்ள பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் 2022 முதல் ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். அதன்பின், மண்டபம் - ராமேசுவரம் இடையே ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"பாம்பன் புதிய பாலம் திறந்த பின்பு அடுத்த நாளே அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் ராமேசுவரத்துக்கு இயக்கப்படும். சென்னை, திருப்பதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படும் ரயில் ராமேசுவரம் வரை இயக்கப்படும். ராமேசுவரம் திருச்சி விரைவு ரயில், ராமேசுவரம் -மதுரை பயணிகள் ரயில்கள் ஏப்.7-ஆம் தேதி முதல் இயக்கப்படும்.
அதேபோல், ஓகா, அயோத்தி, பனாரஸ் உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் படிப்படியாக ராமேசுவரம் வரை இயக்கப்படும். பாசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என ராமேஸ்வரத்தில் இருந்து 28 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.