"வட மாவட்டங்களில் கடந்த 33 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் நடைபெற்று வரும் குளறுபடிகளால் அங்குள்ள விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 33 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், அதனால் நெல் கொள்முதல் நிலையங்களின் முன் உழவர்கள் இரவும், பகலும் காத்துக்கிடக்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உழவர்களுக்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் துரோகம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களைப் போலவே காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நடப்பாண்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதை கொள்முதல் செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. செப்டம்பர் மாதத் தொடக்கத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டாலும் கூட, வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காரணங்களைக் கூறி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் கடந்த 33 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் உழவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுடன் இரவு பகலாக கொள்முதல் நிலையங்கள் முன் காத்திருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிறுத்தி வைக்கப்பட்ட நெல் கொள்முதல் எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரிகளிடமிருந்து உறுதியான பதில் எதுவும் இல்லை. இன்று , நாளை என அதிகாரிகள் உழவர்களை அலைக்கழித்து வரும் நிலையில், இடையிடையே பெய்து வரும் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. ஆனாலும் ஆட்சியாளர்களின் மனம் இரங்கவில்லை; நெல் கொள்முதல் தொடங்கவில்லை.
33 நாள்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதும், எப்போது நெல் கொள்முதல் தொடங்கும் என்பதே தெரியாமல் உழவர்கள் காத்துக்கிடப்பதும் சகித்துக்கொள்ள முடியாத கொடுமைகள் ஆகும். உலகின் மிக மோசமான அரசுகள் என்று விமர்சிக்கப்பட்ட நாடுகளின் நிர்வாகங்கள் கூட, உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களுக்கு இத்தகைய கொடுமைகளை இழைத்ததில்லை. ஆனால், நல்லாட்சிக்கான எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்காத திமுக அரசு, உழவர்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தென்காசியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல் கொள்முதல் சிறப்பாக நடைபெறுகிறது; கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருப்பதாகவும், நெல் கொள்முதல் குறித்து தினமும் தாம் ஆய்வு செய்வதாகவும் கூறியிருந்தார். தினமும் ஆய்வு செய்து வரும் முதலமைச்சருக்கு வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது எப்படி தெரியாமல் போனது? ஒருவேளை இந்த பகுதிகள் தமிழகத்திற்கு அப்பால் இருப்பதாக முதலமைச்சர் நினைத்து விட்டாரோ?
அதிகாரத்தின் திமிரில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்கள் உணவு படைக்கும் கடவுள்களை மதிக்க மறுக்கின்றனர். அதனால் தான் தமிழ்நாட்டின் உழவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் பிரச்சினையை அதிகாரத்தின் உச்சியில் இருந்து அலட்சியமாகப் பார்ப்பதை விடுத்து, உழவர்களில் ஒருவராக இருந்து பார்க்க வேண்டும். 33 நாள்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.