பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது..!
உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாலமேடு கிராம பொது மகாலிங்க சமத்துவ கமிட்டியால் நடத்தப்படுகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் மற்றும் 700 மாடுப்பிடி வீரர்கள் தகுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு சுற்றுக்கு 50 பேர் சுழற்சி முறையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த மருத்துவ பரிசோதனையில் காளைகளின் மருத்துவச் சான்றிதழ் உண்மையாக உள்ளதா, புகைப்படத்தில் இருக்கும் காளைகள் தான் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதா மற்றும் காளைகள் கொம்பின் உயரம், காளைகளின் பற்கள்,காளைகளின் கண்கள், காளைகளுக்கு போதை வஸ்துகள் எதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறதா, காளைகளுக்கு நோய் ஏதும் உள்ளதா, என்று கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வாடிவாசலுக்கு காளைகள் செல்லும் இறுதிச் சான்றிதழ் எனப்படும் மருத்துவ சான்றிதழ் வழங்குவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கால்நடை மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்தில் காளைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் புற்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக காளைகளுக்கு நிழற் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 7மணிக்கு மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி எடுத்த பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதல் சுற்றில் களம் காண உள்ள மாடுபிடி வீரர்களுக்கு மஞ்சள் நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது.