பாகிஸ்தானுக்கு ரூ.8,670 கோடி கடன் - சர்வதேச நாணய நிதியம் விடுவிப்பு!
பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.59,800 கோடி) கடன் அளிக்க சர்வதேச நிதியம் முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் முதல் தவணையாக பாகிஸ்தானுக்கு 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று 2-ஆவது தவணையை விடுத்துள்ளது.
இந்தக் கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு சர்வதேச செலாவணி நிதியம் வழங்கியுள்ளது. இதன் மூலம், 7 பில்லியன் டாலர் கடன்தொகையில் இதுவரை சுமார் 2.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,900 கோடி) கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதை தவிர, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவும் நிதி வசதியின் கீழ், அந்நாட்டுக்கு 1.4 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.11,955 கோடி) வழங்கவும் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், அந்நாட்டுக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.