ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டது.
இந்த தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் அந்நாடு தெரிவித்தது. இதனிடையே, நேற்று இரவு ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜம்மு, காஷ்மீரின் சம்பா, ரஜௌரி, அக்னூர், நக்ரோட்டா, பஞ்சாபின் பதான்கோட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய வான் பாதுகாப்பு படைகள் அவற்றை முறியடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
போர் பதற்றம் காரணமாக இந்திய எல்லையோர மாநிலங்களில் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் முழுமையான மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், ஹரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், ஜம்முவில் மருந்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.