ஐ.நா.வில் இஸ்ரேல் மீது சீறிய பாகிஸ்தான்.. ஒரே பதிலில் ஆப் செய்த இஸ்ரேல்!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவையில் சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு கத்தாரும், பல்வேறு அரபு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் ஆசிம் இப்திகார் அகமது, கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது என்றும், இது பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன், ”இரட்டை கோபுர தாக்குதல்களுக்குப் பிறகு ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சிலானது, பயங்கரவாதிகளுக்கு எந்த நாடும் நிதி அளிக்கவோ, அவர்களுக்கு புகலிடம் கொடுக்கவோ கூடாது என்று தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், அல்கொய்தாவின் பின்லேடன் படுகொலை செய்யப்பட்டபோது அவர் பாகிஸ்தானில்தான் இருந்தார். அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தனது மண்ணில் அடைக்கலம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற உண்மையை பாகிஸ்தானால் மாற்ற முடியாது. அப்போது யாரும் 'வெளிநாட்டு மண்ணில் ஒரு பயங்கரவாதியை ஏன் கொல்ல வேண்டும்?' என்று கேள்வி கேட்கவில்லை. மாறாக, 'ஒரு பயங்கரவாதிக்கு ஏன் அடைக்கலம் கொடுக்கப்பட்டது?' என்றுதான் அனைவரும் கேள்வி எழுப்பினர். இன்றும் அதே கேள்வியை நாம் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.