இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றிய பாகிஸ்தான் அரசு!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு, பாகிஸ்தானில் இருந்து SVES விசாக்களின் கீழ் இந்தியா வருவோருக்கு அனுமதி இல்லை என்றும் அந்த விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படவும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் 2025 ஏப்ரல் 29 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது திருத்தப்பட்டுள்ளபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசாக்கள் காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு எதிர்வினையாற்றியுள்ளது. அதன்படி இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க தடை விதித்தும், இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய ராணுவ ஆலோசகர்கள் 30ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து இதை ஒரு போர் செயலாக கருதியுள்ளது.