‘கேப்டன்’ விஜயகாந்துக்கு பத்ம பூஷண் - வெங்கய்யா நாயுடு, சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் அறிவிப்பு!!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உட்பட 5 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் - டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், மருத்துவர் ஜி.நாச்சியார், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா உள்ளிட்ட 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.