உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாகவுள்ளார் பி.ஆர்.கவாய்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயை தலைமை நீதியதியாக்க பரிந்துரைத்து, அவரது பெயரை மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் பி.ஆர்.கவாய் இந்தியாவின் 52வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். 2007 ஆம் ஆண்டு நாட்டின் உயர் நீதித்துறை பதவிக்கு உயர்த்தப்பட்ட நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான பி.ஆர்.கவாய், பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றில் மோடி அரசாங்கத்தின் 2016 பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த தீர்ப்பும் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்த தீர்ப்பும் அடங்கும்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், 1985-இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். அதன் பின்பு ஆகஸ்ட் 1992-இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2000 ஆம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு அங்கு முதன்மை இருக்கையிலும், நாக்பூர் அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.