2024-ம் கல்வி ஆண்டிலிருந்து 'NET' மதிப்பெண்கள் மூலம் PhD சேர்க்கை - யுஜிசி அறிவிப்பு!
2024-25 கல்வியாண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது.
2024-25 கல்வி ஆண்டில் இருந்து தேசிய தகுதித் தேர்வு (NET) மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான (PhD) சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : நாட்டில் 25.55 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!
இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது;
"2024-25 கல்வி ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் NET தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு PhD பட்டத்துக்கான சேர்க்கையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்த்துவிட்டு ஒரே முறையின் கீழ் சேர்க்கை நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை NET தேர்வு நடத்தப்படுகிறது.
இருமுறையில் ஏதேனும் ஒருமுறை பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரலாம். இந்த நடைமுறை நாட்டில் நல்ல கல்விச் சூழலை மேம்படுத்துவதோடு அறிவுசார்ந்த முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்"
இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.