“ஜெய் பாலஸ்தீனம்!” - பதவியேற்பின் போது மக்களவையில் முழக்கமிட்ட ஓவைசி!
மக்களவை உறுப்பினராக பதவியேற்ற ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ‘பாலஸ்தீனம் வாழ்க’ என முழக்கமிட்டு பதவிப் பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்பியாக பதவியேற்றனர். நேற்று பதவியேற்காத எம்பிக்கள் அனைவரும் இரண்டாவது நாளாக இன்று பதவியேற்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்களும் பதவியேற்றனர். பதவியேற்பின் போது ஒவ்வொரு எம்பியும் ஒவ்வொரு முழக்கங்களை கூறி பதவிப் பிரமாணம் செய்தனர்.
அந்த வரிசையில் ஹைதராபாத் தொகுதி எம்பி ஓவைசி மக்களவை உறுப்பினராக பதவியேற்ற பிறகு ‘ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம்’ என்று முழக்கமிட்டார். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“பாலஸ்தீனம் அல்லது வேறெந்த நாட்டுடனோ எங்களுக்கு பகை இல்லை. பதவிப் பிரமாணம் செய்யும்போது எந்த உறுப்பினரும் மற்ற நாட்டைப் புகழ்ந்து முழக்கம் எழுப்புவது முறையா. அது சரியா என்பது குறித்து விதிமுறைகளில் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.