‘வர வர நம்ம நிலைமை ரொம்ப மோசமா போகுதே...’ - 90’ஸ் கிட்ஸ் ஒட்டிய போஸ்டர் வைரல்!
திருநெல்வேலியில் 90’ஸ் கிட்ஸ் இளைஞர்கள் திருமணமாகாததைக் குறிப்பிட்டு, ஒட்டிய போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே 90’ஸ் கிட்ஸ் அதாவது 1990 களில் பிறந்த இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது என்பது பெரும் கஷ்டமாக உள்ளது. இது அண்மை காலமாகவே பேசு பொருளாகியுள்ளது. இது சம்பந்தமான பல மீம்ஸ்களும் இணையதளங்களில் வைரலாவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே!! நீ எத்தனை வருசம் நல்லா வாழ்ந்துருவ? உன் பிள்ளைக்கு இந்த மாரி வந்தா? கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறியே? புறம்பேசி தடுக்க நினைக்கிறியே? ஒருத்தனுக்கு நல்லது நடக்கிறதை கெடுக்க நினைக்கிறய நல்லா இருப்பியா நீ? என எழுத்துப் பிழைகளான வார்த்தைகளுடன் அந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பொன்னாக்குடி கிராமத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது பேசு பொருளாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி எல்லை முடிந்து நாகர்கோவில் செல்லும் சாலை தொடங்கும்
இடத்தில் உள்ளது பொன்னாக்குடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த வயதான நபர் ஒருவர் ஊருக்குள் திருமணம் ஏதேனும் நிச்சயிக்கப்பட்டால், உடனடியாக அந்த வீட்டு நபர் குறித்து தவறாக தகவல் அனுப்பி திருமணத்தை நிறுத்துவது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருவதாக அங்குள்ள இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற தொடர் கதையான நிலையில் இந்த முடிவில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொன்னாக்குடி ஊரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட "90 கிட்ஸ்" இளைஞர்கள் திருமணம்
ஆகாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.