என்சிஇஆர்டி மீது வழக்குப்பதிவு? தினேஷ் பிரசாத் சக்லானிக்கு கடிதம்!
பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கவேண்டும் இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என சுஹாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் என்சிஇஆர்டி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) 12ம் வகுப்புக்கான திருத்தப்பட்ட அரசியல் அறிவியல் பாடநூலை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தி குறித்த பாடம் 4 பக்கங்களில் இருந்து 2 பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குஜராத்திலிருந்து பாஜகவினர் ரத யாத்திரை மேற்கொண்டது மற்றும் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தது உள்ளிட்ட தகவல்கள் முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்தன. இந்த தகவல்கள் புதிய பதிப்பில் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாட புத்தகங்கள் காவிமயமாக்கப் பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் அயோத்தி குறித்த பாடம் குறைக்கப்படுவது தொடர்பாக தங்களிடம் கலந்தாலோசிக்காமல், அந்த புத்தகங்களில் தங்களது பெயர்களை பயன்படுத்தியுள்ளதாக, என்சிஇஆர்டி கல்வி முறையில் பாடப்புத்தக ஆலோசனைக் குழுவில் ஆலோசகர்களாக இருந்த சுஹாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சுஹாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகிய இரு ஆசிரியர்களும் என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு நேற்று (ஜூன் 17) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "பொறுப்புகளிலிருந்து விலகி ஓராண்டு கடந்துவிட்டதையடுத்து, எங்கள் பெயர்களை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டபோதிலும் புத்தகங்களின் புதுப்பதிவில் எங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
எங்களிடம் கலந்தாலோசிக்காமல் பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்ய எந்த தார்மீக உரிமையும், சட்ட உரிமையும் என்சிஇஆர்டி கவுன்சிலுக்கு இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் பெயரை பயன்படுத்தி அதன்பின்னால் என்சிஇஆர்டி கவுன்சில் ஒளிந்துகொண்டு செயல்படுகிறது. விற்பனைக்கு வந்துள்ள இந்த புத்தகஙக்ளை திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் என்சிஇஆர்டி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளனர்.