'தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்' - இந்திய வானிலை ஆய்வு மையம் !
தமிழகம் மற்றும் புதுவைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய உள்ளது. ஏற்கனவே ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 11, 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை நோக்கி வரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.