கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வங்காள விரிகுடா கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா, கர்நாடக கடற்கரைகள் மற்றும் கடல் பகுதிகளிலும், லட்சத்தீவு கடற்கரையிலும் மோசமான வானிலை ஏற்படும் என்பதால் 27 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.