4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தெற்கு அந்தமான் கடலில் நேற்று (நவ.22) உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது என்றும், இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.