சபாநாயகருக்கு எதிர்ப்பு - இபிஎஸ் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்த அதிமுக ஏம்எல்ஏக்கள்!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இன்றைய நாளில் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. நேற்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்க துறையை சோதனை நடைபெற்ற நிலையில் "அந்த தியாகி யார்?" என்ற பேட்ச் அணிந்தும், பேரவைக்குள் விளம்பர நோட்டீசுகளை கைகளில் பிடித்தும் அதிமுகவினர் பேரவையில் பேச வாய்ப்பு கோரினர்.
சட்டப்பேரவை விதியின்படி நடப்பு கூட்ட தொடரில் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கையில் பங்கேற்பதற்கு தடை விதிக்குமாறும், சபாநாயகர் தனது உத்தரவை பரிசீலித்து பேரவை நடப்பு கூட்டத்தொடரில் அதிமுகவினர் கலந்து கொள்வதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் நேற்று கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப்பெற்றார். மேலும், நடப்பு கூட்ட தொடரில் பங்கேற்கும் போது எந்த விதமான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களையும், பேட்ஜ்களையோ அவைக்குள் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடும் விதித்திருந்தார்.
இந்த நிலையில் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று பேரவைக்கு வருகை தந்தனர்