எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 21 நாட்கள் நடைபெற்று வந்த இக்கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று. இதனிடையே மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.
இதில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா தலைமையில் மக்களவை அலுவல் நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நேற்று கொண்டு வந்த பதவி நீக்க திருத்த மசோதா உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, சபாநாயகர் மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைத்துள்ளார். அதே வேளை பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 18 உறுப்பினர்கள் வழங்கிய நோட்டீஸ் மீது விவாதம் நடத்த மாநிலங்களவையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.