சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு!
கடந்த 21ம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக தினசரி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
குறிப்பாக சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டபோது, நாடாளுமன்ற அலுவல் நேரத்தை வேண்டுமென்றே சீர்குலைக்க எம்.பி-க்கள் ஈடுபடுவதாகவும் இது ஜனநாயகத்திற்கு அழகானது அல்ல என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.
மேலும் கோஷங்கள் எழுப்புவதும், பதவிகள் ஏந்துவதும் தான் எதிர்க்கட்சி எம்.பி. க்களின் முடிவு என்றால் அதை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்யலாம், ஆனால் மக்களவைக்கு உள்ளே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பிற எம்.பி-க்களின் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என ஓம் பிர்லா கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.