அமித் ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மக்களவை நேற்று நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கிருந்த எம்.பி-க்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களே மடக்கிப் பிடித்த நிலையில், பின்னர் இருவரும் அவை பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில், மக்களவையின் உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசிய மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம் என்ற பெண்ணும், அன்மோல் ஷிண்டே என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களில் மனோ ரஞ்சன் என்பவர் மைசூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும், மற்றொருவர் சாகர் சர்மா என்பதும் தெரிய வந்தது.
மேலும், மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதத்தை காண்பித்து இருவரும் மக்களவைக்குள் நுழைய அனுமதி சீட்டு பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரும் புகையை உமிழும் பொருளை வீசியதாகவும் இதனால் கண்கள் எரிந்ததாகவும் நேரில் பார்த்த எம்பிக்கள் தெரிவித்தனர். அவர்கள் இருவரும், பாரத் மாத ஹி ஜெய் மற்றும் சர்வாதிகாரம் கூடாது என்று கோஷம் எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இதனிடையே மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. இது நாடாளுமன்ற பாதுகாப்பில் மிகப்பெரிய குறைபாடு இருப்பதை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எம்பிக்கள் குற்றம் சாட்டினர். இந்த அத்துமீறல் சம்பவம் சாதாரண விஷயமில்லை என்றும் எம்.பி.க்கள் கூறினர்.
இதையடுத்து, உள்துறை செயலர் அஜய் பல்லா நாடாளுமன்றத்தில் ஆய்வு செய்தார். அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும் சிறிது நேரத்திற்கு பிறகு கூடின. பின்னர், அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாளை விவாதிக்கப்படும் எனக் கூறி, நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரியும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 2 மணி வரை மக்களவையும், பிற்பகல் 12 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.