‘லக்கி பாஸ்கர்’ பார்த்த 4 மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பியோட்டம்!
லக்கி பாஸ்கர் படத்தைப் பார்த்துவிட்டு, கார் வாங்கும் அளவுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என 4 பள்ளி மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், விடுதியில் தங்கிப் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் ‘லக்கி பாஸ்கர்’ படம் பார்த்த பிறகு, படத்தின் நாயகன் பாஸ்கரைப் போலவே கார், வீடு வாங்கும் அளவுக்கு பணம் கிடைக்கும் வரை தாங்கள் திரும்ப மாட்டோம் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 6.20 மணியளவில் விடுதியில் இருந்து மாணவர்கள் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. போடாபதி சரண் தேஜா, குடால ரகு, நக்கலா கிரா குமார் மற்றும் கார்த்திக் ஆகிய மாணவர்கள் நேற்று முன்தினம் விடுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மாணவர்கள் வீடு திரும்பவில்லை என்பதை விடுதி நிர்வாகம் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.