எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா - மக்களவை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஹோலி விடுமுறையை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கேள்விகளை தென்மாநில எம்பிக்கள் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக திமுக எம்பிக்கள் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கேள்விகளை முன்னிறுத்தி வருகின்றனர்.
இன்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால் இதற்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மகா கும்பமேளா குறித்து பேசினார்.
இதையடுத்து பிரதமர் பேசி முடித்த பின்னர் எந்தக் கேள்வியும் எழுப்பக் கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை மையப்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கியப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி..க்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். கும்பமேளா உயிரிழப்புகள் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கோஷம். எம்.பி.க்கள் அவரவர் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.