நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு - எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம் போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று அவைக்குள் குதித்தனர். பின்பு அவர் புகைக்குப்பிகளை வீசனர். இதனால் மக்களவையில் பரபரப்பு நிலவியது. அந்த இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்த எம்பிக்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைக்குள் குதித்து, சர்வாதிகாரம் ஒழிக என்று இருவரும் கோஷம் எழுப்பியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.