"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது.." - இந்திய விமானப் படை விளக்கம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.
இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதற்கிடையே, உடன்பாட்டை மீறி ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வான் பாதுகாப்பு படைகள் அவற்றை முறியடித்ததாகவும் தகவல் வெளியானது.
பின்னர், ஜம்மு & காஷ்மீரின் ரஜோரி, அக்னூர், பூஞ்ச் மற்றும் பஞ்சாபின் பதான் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு ட்ரோன்கள், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்த தாக்குதல்கள் எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால், ஜம்மு & காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப் படை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"இந்திய விமானப்படை, ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிகவும் துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதால், உரிய நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். எனவே ஊகங்கள், தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும்"
இவ்வாறு இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.