திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் திறப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (ஜன. 10) அதிகாலை 12.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏழுமலையானுக்கு தோமாலை, அர்ச்சனை ஆகியவை நடத்தப்பட்டன. மேலும் உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி, சமேதராக முதலில் சொர்க்கவாசலில் பிரவேசித்து எழுந்தருளினார். அதனை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏழுமலையானுக்கு பல வகைகளில் டன் கணக்காக மலர்களை பயன்படுத்தி அலங்கார செய்யப்பட்டது. இது தவிர தசரா உற்சவத்தை முன்னிட்டு மைசூரில் மின்சார சரவிளக்கு அலங்கார பணிகளை செய்யும் கலைஞர்களை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதிக்கு வரவைத்தது. மேலும் ரூ.300 டிக்கெட் வாங்கியும், இலவச தரிசன டோக்கன்கள் வாங்கியும் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பார்க்க அனுமதிக்கபட்டனர்.
இந்நிலையில் கட்டணம் மற்றும் இலவச தரிசனம் டோக்கன் ஆகிய டிக்கெட் இல்லாத பக்தர்கள், நாளை துவங்கி 19ஆம் தேதி வரை கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை வழிபட அனுமதி கிடையாது என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சொர்க்கவாசல் திறப்பால் இக்கோயிலுக்கு வழக்கத்தைவிட பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.