#Ooty | பயன்பாடின்றி கிடக்கும் மின்சார படகுகள்… நடவடிக்கை எடுக்கப்படுமா?
உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அதனைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகள் முன்வராததால் மின்சார படகுகள் பயன்பாடற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு, நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வாழக்கம். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும். அதே நேரத்தில், கோடை சீசன் இல்லாவிட்டாலும்கூட, வார வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்ய தவறுவதில்லை.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகை படகு இல்லத்தில் ‘டோனட் போட்’ எனப்படும் மின்சார படகு சவாரி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மின்சார படகு சவாரி சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படகில் 20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இந்த கட்டணம் காரணமாக சுற்றுலா பயணிகள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இதனால் இந்த மின்சார படகு பயன்பாடற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படகு சவாரி நேரத்தை அதிகரிப்பது அல்லது கட்டணத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் படகு இல்ல நிா்வாகிகள் ஈடுபட்டு, மின்சார படகுகளை சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என்பதே சுற்றுலா ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.