“நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!
சென்னையில் இன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் அரிபந்தாமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசுகையில்,
“அரசமைப்பின்படி உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லை. முன்பு, நீதிபதிகள் நியமனத்துக்கு உறுப்பினர்கள் கொண்ட நிரந்தர அமைப்பு இருந்தது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை. இது நன்றாகவே தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் 34 சதவீதம் பிரமாண சமுதாயமாக இருக்கின்றனர். இதுபோன்ற நடைமுறையைப் பார்க்கும்போது ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கும் கவலை ஏற்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீதிபதி பணியிடங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்குப் போதிய அளவில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. 79 சதவீத நீதிபதி பணியிடங்கள் உயர் சமூக மக்களுக்கே நாடு முழுவதும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி பார்த்தால், நீதிபதிகளின் நியமனம் முறையாக நடப்பதில்லை. உச்ச
நீதிமன்ற, நாடாளுமன்ற வழிக்காட்டுதல் படி நீதிபதிகள் நியமனம் நடப்பதில்லை
என்பது தெளிவாகிறது. ஒரு சில குழுக்களிலிருந்து நியமிக்கப்படாமல் நாடு முழுவதும் பரவலாக நியமனங்கள் நடைபெறவேண்டும். பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். கேரளத்தில் 74 சதவீதம் அளவுக்கு கீழமை நீதிமன்றங்களில் பெண்கள்தான் இருந்தனர்.
ஆனால் அவர்களில் ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை” என்று முன்னாள் நீதிபதி சந்துரு குற்றம் சாட்டியிருக்கிறார்.