கர்நாடக கோயில்களில் #NandiniGhee மட்டுமே பயன்படுத்த வேண்டும் - சித்தராமையா அரசு உத்தரவு!
கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நேற்று லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும்
உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கோயிலில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கர்நாடக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரித்தல், விளக்குகள் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும் நந்தினி நெய்யைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் உள்ள 1,80,000 கோயில்களில் 35,500 கோயில்கள் கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.