Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும்!” - சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

06:52 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும் என்று திமுக இளைஞர் அணி செயலாளரும் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

Advertisement

சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போல, சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்ற ஜனவரி 21-ம் தேதியை என்னால் மறக்க முடியாது. இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது. இளைஞரணி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தலைவர் ஸ்டாலினை அழைப்போம். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு 15 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் நூலகங்கள் திறக்கப்படும்.

மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை கலைக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய உண்ணாவிரதம் நடத்தினோம். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 50 லட்சம் கையெழுத்து வாங்கிட இயக்கம் நடத்தியதில் இதுவரை 85 லட்சம் கையெழுத்து வாங்கியுள்ளோம். விரைவில் இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு துறைகளை மத்திய அரசு வைத்துள்ளது. அவற்றை மாநில அரசின் வசம் மீண்டும் வழங்க வேண்டும். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் செலுத்தினால் 29 காசுகள் மட்டுமே மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது. 5 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்தியதில் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இதனால் மழை வெள்ள பாதிப்பின் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

நம்முடைய மொழி, பண்பாட்டு உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்வி மட்டுமல்ல மற்ற அனைத்து கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர். 2 ஆயிரம் வருடங்களாக முயன்றும் தமிழரின் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. இன்னும் 2 ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழிக்க முடியாது. அமலாக்கத்துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள். ஆனால், திமுக தலைவர்களை மட்டுமல்ல, திமுக தொண்டர் வீட்டு குழந்தையை கூட அமலாக்கத்துறையால் மிரட்ட முடியாது. திமுக என்றைக்கும் தொண்டர்களை கைவிட்டதில்லை. தொண்டர்களுக்கு பாதிப்பு என்றால் தலைவரே களத்தில் இறங்கி போராடுவார்.

திமுக நூற்றாண்டை கடந்துள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டாவது நம்முடைய கட்சி களத்தில் நின்றால்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும். ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பிடிப்புடன் திமுக தொண்டர்கள் உள்ளனர். உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் என அனைத்து தரப்பினருடன் இணைந்து கைகள் கோர்த்துக் கொண்டு நாங்கள் ஒடி வருகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற உள்ளது. முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இளைஞர் அணியினருக்கு ஒரு லட்சியம் உள்ளது. 2018-ம் ஆண்டு கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, சாதி பாகுபாடற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று சொன்னார். தலைவரின் கனவை நனவாக்கித் தருவதுதான் இளைஞரணியினரின் லட்சியம். இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூச செய்யும் பாசிச பாஜகவை அகற்றுவதே அதற்கான முதல் பணியாகும்.

இளைஞர் அணியினருக்கு நிறைய பொறுப்புகள் கொடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இது இளைஞர் அணியல்ல கலைஞர் அணி.

Tags :
திமுக இளைஞர் அணி மாநாடுCMO TamilNaduDMK Youth WingDMK Youth Wing ConferenceDMK YW4 State RightsKanimozhiMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesSalemTamilNaduUdhayanidhi stalinYouth wing conference
Advertisement
Next Article