ஆன்லைன் டிரேடிங் மோசடி - உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவர்!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம்
பணத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சவிதா
பொறியியல் கல்லூரியில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா (21) என்ற மாணவர் விடுதியில் தங்கி EEE மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அறையில் இருந்த ராமையா புகாலாவை காணாததால் அவரின் நண்பர்கள் அவரை தேடியுள்ளனர்.
அருகில் இருந்த அறைகளில் தேடி பார்க்கும் போது ஒரு அறை உள்பக்கம் தாழிடப்பட்ட நிலையில் இருந்தது. இதனை கண்ட நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த
அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராமையா புகலா மின்விசிறியில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரின் நண்பர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் உடலை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்
இறந்த ராமையா செல்போன் ஆப் மூலம் ஆன்லைன் டிரேடிங் செய்து வந்ததும்,
நேற்று இரவு மட்டும் அறையில் இருக்கும் நண்பர்களிடம் ரூ.3 லட்சம் வரை கடனாக
பெற்றதும் தெரியவந்தது.
அவ்வப்போது நண்பர்களிடம் இதுபோன்று கடனாக பெறுவதும், திருப்பித் தருவதும் வழக்கமாக கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலம் நேற்று சுமார் ரூ.7 லட்சம் வரை பணத்தை இழந்திருப்பதாகவும், இதனால் மனமுடைந்த ராமையா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.