ஆன்லைன் சூதாட்டம் - உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!
ஆன்லைன் சூதாட்டத்தில் 2 லட்சம் ரூபாயை இழந்த பிளஸ் டூ மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த். இவர் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் விளையாடி இருக்கிறார். விளையாட்டில் தந்தையின் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இந்த விஷயம் தந்தைக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என நினைத்து நண்பர்களிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை கடன் வாங்கியுள்ளார். இப்பணத்தை வைத்து, இழந்த பணத்தை பெறலாம் என நினைத்து மீண்டும் விளையாடியிருக்கிறார்.
ஆனால், அப்பணத்தையும் பிரசாந்த் இழந்துள்ளார். இந்த நிலையில், மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார். வேலை காரணமாக வெளியில் சென்று வீடு திரும்பிய பெற்றோர் மகன் உயிரை மாய்த்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவன் பிரசாந்த் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் கடனாளி ஆனது உறுதியாகியுள்ளது.
சமீப காலமாகவே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.மேலும், ஆன்லைன் சூதாட்டங்களால் நிகழும் மரணங்கள், பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவையாக இருக்கின்றன என மனநல மருத்துவர் அசோகன் குறிப்பிடுகிறார். ஏனெனில் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கும் நபர்கள் ஒருவேளை தங்களது பணத்தை சூதாட்டங்களில் இழந்தால் கூட அவர்களது வாழ்வில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.