“வரதட்சணையாக 1 ரூபாய், 1 தேங்காய் மட்டும் போதும்!” அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் மாப்பிள்ளை!
ராஜஸ்தானில் மணமகன் ஒருவர் வரதட்சனை எல்லாம் வேண்டாம், ஒரு ரூபாயும் ஒரு தேங்காயும் கொடுங்கள் போதும் என கூறி மணமகளை திருமணம் செய்து கொண்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
வீட்டை கட்டி பார், கல்யாணத்தை செய்து பார் என்பது பழமொழி! வீட்டை கட்டும் போது, நாம் நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை செல்லுமே தவிர, குறையவே குறையாது. அது போல்தான் கல்யாணம் என வந்தாலே இத்தனை ஆயிரம் , இத்தனை லட்சம், இத்தனை கோடி என பட்ஜெட் போட்டாலும் அது இது என செலவு இழுத்துக் கொண்டே செல்லும்.
கடைசியில் பட்ஜெட்டில் துண்டு விழும் அளவுக்கு இருக்கும். அதிலும் இந்த வரதட்சிணை என்ற ஒன்று இருக்கிறதே, கொடுப்பவர்கள் கொடுக்கும் வரை வாங்குபவர்களும் போதும் என சொல்லாத அளவுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். இதில் சிலர் விதிவிலக்காக இருக்கத் தான் செய்கிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப மாப்பிள்ளைக்கு நகை, கார், பைக், பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் கொடுக்கப்படுகிறது. இதில் சிலர் காலி நிலமாகவோ வீட்டையோ கூட வரதட்சிணையாக கொடுக்கிறார்கள். இந்த வரதட்சிணை தண்டனைக்குரிய குற்றம் என்றாலும் ஒரு கட்டத்தில் இன்னும் வாங்கி கொண்டு வா என அடித்து தாய் வீட்டுக்கு அனுப்பும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இந்த வரதட்சிணையால் எத்தனை தற்கொலைகள், கொலைகள், வன்முறைகள், தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் நாராயண் ஜாகர் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனிதா வர்மாவுக்கும் திருமணம் நடந்தது. அப்போது வரதட்சிணையாக ஒரு ரூபாயும் தேங்காயும் கொடுக்கப்பட்டது. இந்த திருமணத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்ட ஜெய் நாராயண் ஜாகர் பொதுப் பணித் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் திருமணம் செய்து கொண்ட அனிதா வர்மா, முதுகலைப் பட்டதாரி. அவரும் அரசுப் பணிக்கு தயாராகி வருகிறார். முதுகலை வரை மனைவியை அவருடைய பெற்றோர் படிக்க வைத்ததே வரதட்சிணை போன்றது தான் என மணமகன் ஜெய் நாராயண் தெரிவித்துள்ளார். வரதட்சிணை வேண்டாம் என்பதை தானே விரும்பி சொன்னதாகவும் அதை தன் பெற்றோரும் ஏற்றதாகவும் தனது மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் அவரை முதுகலை படிக்க வைத்த காரணத்திற்காக ஓராண்டு சம்பளத்தை அவரது பெற்றோருக்கு கொடுக்கவும் தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறி அசத்தி ஆச்சரியப்பட வைக்கிறார் புதுமாப்பிள்ளை!
ஆண்கள் மட்டும் வரதட்சிணை கேட்பதில்லை, பெண்களும்தான்! வரன் தேடும் போது மாப்பிள்ளைக்கு சொந்த வீடு வேண்டும். அதுவும் அவர் பெயரில் இருக்க வேண்டும், மாப்பிள்ளைக்கு எந்த கடனும் இருக்கக் கூடாது, தனிக்குடித்தனம் நடத்த ஒப்புக் கொள்ள வேண்டும், மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும், தனி குடித்தனத்தில் தனது தாய், தந்தையை உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என ஏதேதோ கண்டிஷன்களை போடுகிறார்கள். எனவே ஆண்களும் வரதட்சிணையை கேட்காமல் பெண்களும் இத்தனை கண்டிஷன்களை போடாமல் இருந்தால் திருமணங்கள் உடனடியாக நடக்கும். இருமனங்கள் இணையும் திருமணங்களும் ஆண்டாண்டு காலத்திற்கும் இனிக்கும்.