#Odisha-வில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
ஒடிசாவில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுசூதன் பாண்டே (வயது 45). இவர் இன்று (டிச.04) வழக்கம்போல் வயலில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது, அவரின் விளைநிலத்தினுள் புகுந்த யானை ஒன்று, மதுசூதன் பாண்டேவை தாக்கிறது. இதில் படுகாயமடைந்த அவர் கத்தினார். அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் யானையை அங்கிருந்து விரட்டினர்.
பின்னர் படுகாயமடைந்த பாண்டேவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை இயற்கை சாரா மரணமாக பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
விளைநிலத்துக்குள் புகுந்த யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சிமிலிபால் வனவிலங்கு பூங்காவிலிருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக பரிப்படா வனப்பகுதிக்குள் புகுந்ததாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.