#Mpox2024 | கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து , கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே , இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு, குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு, நேற்றைய தினம் மருத்துவமனையில் தனிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் நோயாளியின் மாதிரிகள் Mpox இருப்பதை உறுதிப்படுத்த பரிசோதனைகள் எடுக்கப்பட்டன என்ற தகவல் வெளியான நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவெ இந்தியாவில் கண்டறிய நபருக்கு Clade 2 வகை தொற்றாக இருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து கேரள - தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான மற்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை மேம்படுத்தவும், தேவையான மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்து, தனிமைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அமைச்சகம் , மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளானது எடுக்கப்பட்டுள்ளன
ஆப்பிரிக்கா, காங்கோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் Mpox தொற்று பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox-யை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. காங்கோ குடியரசு நாட்டில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை, பல்வேறு நாடுகளிலும் பரவியது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.