15 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகும் 'ஆயிரத்தில் ஒருவன்'!
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன்’ படம் வெளியானது.
படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். ‘பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்’உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இதற்கிடையே, செல்வராகவின் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் 'யுகனிக்கி ஒக்கடு' என்கிற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தமிழில் இப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாவிட்டாலும் காலம் செல்லச் செல்ல தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் மார்ச் 14ம் தேதி ரீ-ரிலீஸாகவுள்ளது. ஆந்திரம், தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.