Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்கள் - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

01:40 PM Feb 14, 2024 IST | Jeni
Advertisement

'ஒரே நாடு ஒரே தேர்தல்', தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த இரண்டு தனித் தீர்மானங்கள் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேறின.

Advertisement

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்,  ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.  மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் அமர்வில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது,  ஒரே நாடு ஒரே  தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற இரண்டு தனித் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.  இந்த தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.

பின்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த இரண்டு அரசினர் தனித் தீர்மானங்கள் மீது சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

தவாக தலைவர் வேல்முருகன்

இதில் பங்கேற்றுப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், முதலமைச்சர் கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களாக கருதி வரவேற்பதாக கூறினார்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

அவரைத் தொடர்ந்து பேசிய கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், “இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியை மத்திய அரசு செய்து வருகிறது. அதை எதிர்ப்பது நமது கடமை.  முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

பின்னர் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,  ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசமைப்பு சொல்லக்கூடிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாக கூறினார்.  மேலும், முதலமைச்சர் முன்மொழிந்துள்ள இரண்டு தீர்மானங்களையும் மனதார வரவேற்பதாகக் கூறினார்.

மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைகுமார்

மதிமுக சார்பில் பேசிய எம்.எல்.ஏ சதன் திருமலை குமார்,  ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையையும்,  மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்து,  வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை மதிமுக சார்பில் வரவேற்றார்.

விசிக சார்பில் சிந்தனைச்செல்வன்

அதேபோல், விசிக சார்பில் பேசிய எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வனும், தமிழகத்தைச் சமூகநீதி பாதையில் வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் கொண்டுவந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை வரவேற்றார்.

காங். குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை

சட்டமன்ற காங். குழு தலைவர் செல்வப்பெருந்தகை, “முதலமைச்சர் கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் காங்கிரஸ் பேரியக்கம் ஆதரிக்கிறது.  வரவேற்கிறது. தென்னிந்தியாவிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டும் தீர்மானங்களாக இதை பார்க்கிறோம்” என்று கூறினார்.  முதலமைச்சர் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களை இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் வரவேற்றன.

பாஜக சார்பில் வானதி சீனிவாசன்

பின்னர், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை தொடர்பான தனி தீர்மானத்தில் இருக்கும் கவலையை,  அக்கறையை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்,  இதனை சீர்திருத்தமாக தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.  இரண்டு தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : “மனமார்ந்த நன்றி...” - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சி

அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம்

அதிமுக சார்பில் பேசிய எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தெரிவித்தார்.

இதையடுத்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில்,  ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

 

Tags :
AssemblySessionCMOTamilNaduMKStalinOneNationOneElectionResolutionsTNAssemblyTNGovt
Advertisement
Next Article