20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் - கிராம மக்கள் அஞ்சலி!
20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.
இதில்,எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மட்டும் மாறாது. தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுனாமிக்கு பலியானார்கள். சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலோர கிராமங்களில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 188 பேர் பலியான பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
கிராம மக்களுடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், திருப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கடலில் பாலை ஊற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களின், ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். மேலும் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் இடுகாட்டில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினர்.