உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளே ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது என தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார்.
இதுகுறித்து தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்ததாவது:
“உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்னணி நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.43 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இன்று நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளே அதன் இலக்கான 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டி உள்ளது” என தெரிவித்துள்ளார்.