"நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
"நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்" என காணொலி வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் இன்று ( ஜூலை 27 ) நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது..
“ தலைநகரில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழிவாங்குகிற பட்ஜெட்டாகதான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை மதுரை எய்ம்ஸ் திட்டம் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்பு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.