Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?

10:47 AM Jun 12, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: 

“மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள் போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன.

இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏஐடிபி வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் நாளை (ஜூன் 13) முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.

அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோட்டார் வாகன துறை, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து, டிஎன் என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன. எனவே வரும் 14-ம் தேதி முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது.

எனவே முறையற்ற வகையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின்போது காண்பிக்க வேண்டும்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
News7Tamilnews7TamilUpdatesomni busRegistrationTN GovtTNSTCTourist VehicleTravels
Advertisement
Next Article