ஆம்னி பேருந்து தீ விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 42 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எறிந்துள்ளது.
இந்த தீ விபத்தில் பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். மேலும் தீ மளமளவென பேருந்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் எஞ்சிய பயணிகளில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மேலும் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.