செவ்வாய் கிரகத்தில் பழமையான கடற்கரை படிமம் கண்டுபிடிப்பு!
அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா 1970களில் பூமிக்கு அருகில் இருக்கும் செவ்வாய் கிரகத்தில் மரைனர் 9 ஆர்பிட்டர் கருவியைக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டது. அப்போது அந்த ஆர்பிட்டர் செவ்வாய் கிரக நிலப்பரப்பை படமெடுத்து அனுப்பியது.
தொடர்ந்து விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரின் அளவு மற்றும் காலநிலை குறித்து விவாதித்து வரும் நிலையில், அங்கு நுண்ணுயிரிகள் இருந்ததா? என்பது குறித்து ஆராய கடந்த 2011 ஆம் ஆண்டு கியூரியாசிட்டி என்ற ரோவர் கருவியை நாசா அனுப்பியது. இதன் மூலம் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து 2020ஆம் ஆண்டு சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் ஜூராங் ரோவர் கருவியை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இக்கருவி 3,300 கிமீ விட்டம் கொண்ட அங்குள்ள யுடோபியா பிளானிஷியா சமவெளி பகுதியில் தரையிரங்கியது. இந்த பகுதியில் பெரிய நீர்நிலை இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஜூராங் ரோவர் கருவிக்கொண்டு சீனாவின் குவாங்சோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்ஹுய் லி தலைமையிலான ஆராய்ச்சி குழு, அமெரிக்க விஞ்ஞானிகளுடன் சேர்ந்து செய்த ஆய்வின்படி, 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழமையான கடற்கரை படிமத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடற்கரை படிம கண்டுபிடிப்புக்கு டியூடெரோனிலஸ் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.