ஒகேனக்கல்: நீர்வரத்து விநாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு | அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நேற்று முன் தினம் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் இன்றைய நிலவரப்படி 61 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றங்கரையின் இருபுறமும் தொட்டப்படி தண்ணீர் சீறிபாய்கிறது. நாளுக்கு நாள் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.